வங்கதேச எல்லை நோக்கிச் செல்லும் ஒரு மலைச் சாலையில் இருந்து கோபித்துக் கொண்டு பிரிகிறது ஒரு மண் பாதை. மடிப்பு மடிப்பாக பிரிந்து கீழிறங்கும் அந்த மண் பாதையில் தொடர்ந்து தொடர்ந்து சுமார் 20 கி.மீ. பயணித்தால் சுற்றிலும் மலை சூழ்ந்திருக்கும் ஒரு தரைப்பகுதியில் கால் பதிக்க முடியும்.
அங்கே மலை தனது சுருக்குப் பையில் பொதித்து வைத்திருக்கும் சிறுவாடாக கிடக்கிறது ஓடைக் கரையோர மலைக் கிராமம் ரிவாய்.
வைரமுத்து எழுதிய 'சிகரங்களை நோக்கி' கவிதை நாவலை நீங்கள் படித்திருந்தால் மலையூத்து கிராமத்தை நேரில் பார்த்துவிட்டதாய் புளகாங்கிதம் அடைவீர்கள்.